நேபாள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் பக்தா பகதூர் (22). சென்னை தி.நகர் பகுதியில் உள்ள நல்லி சில்க்ஸ் துணிக்கடையில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வரும் இவர் அந்தக் கடையின் மேல்பகுதியில் உள்ள அறையில் தங்கி வருகின்றார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருவதால் வருகிற 31ஆம் தேதி வரை அனைத்து துணி கடைகளையும் மூட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், கடையில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர்களைச் சொந்த ஊருக்கு போகச் சொல்லி கடை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆனால் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தனது நண்பரின் அறையில் நேற்று தங்கியுள்ளார், இன்று காலை எழுந்தவுடன் பக்தா பகதூர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அருகிலிருந்த மருத்துவமனைக்கு செல்வதற்காக அசோக் நகர் பகுதியில் தெருவில் நடந்து செல்லும்போது பக்தா பகதூர் மயங்கி கீழே விழுந்தார்.
இதனைக் கண்ட பொதுமக்கள் உடனே அவரை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இவர் வயிற்று வலியால் இறந்துள்ளாரா அல்லது கரோனா தொற்று காரணமாக பலியானாரா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பே தெரிய வருமென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.