சென்னை: தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டில் வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.25 அரசு நிர்ணயம் செய்தது. அத்துடன் கூடுதலாகப் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 கட்டணம் என்று இருந்தது. அத்துடன், காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்திற்கு ரூ.3.50 காசுகள் எனவும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50% கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆட்டோ ஓட்டுநர்களிடம் அதிக கமிஷன்: இந்நிலையில், விலைவாசி உயர்வால் அரசின் பரிந்துரையை ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதேசமயம் ஓலா (Ola), உபேர் (Uber) உள்ளிட்ட நிறுவனங்கள் செயலி மூலம் ஆட்டோக்களை இயக்கின. தற்போது 80%-க்கும் அதிகமான ஆட்டோக்கள் இத்தகைய செயலி நிறுவனங்களுடன் இணைந்துள்ளன. இதைப் பயன்படுத்திய செயலி நிறுவனங்கள் ஓட்டுநர்களிடம் அதிக கமிஷன் வசூலித்து வருவதாக சொல்லப்படுகிறது.
கட்டணத்தை ரூ.25-40 ஆக்க கோரிக்கை: இதையடுத்து ஆட்டோ கட்டணத்தை, மறுவரையறை செய்வதற்காக ஆட்டோ சங்கங்களின் மூலம் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மற்றும் நுகர்வோர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி உயர்த்தப்பட்ட கட்டணப் பட்டியலை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, 1.8 கி.மீட்டருக்கும் இடையேயான தூரத்துக்குக் கட்டணமாக ரூ.25-லிருந்து ரூ.40-ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். கூடுதலான ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.18 எனவும் உயர்த்தலாம் என பரிந்துரைத்துள்ளதாகத் தெரிய வருகிறது.
ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கோரிக்கை: இதனிடையே, தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, நேரத்துக்கும், தூரத்துக்கும் இடையேயான வேறுபாடுகளை ஒப்பிட்டு, அறிவியல் முறையிலான கட்டணத்தை, அரசு நிர்ணயிக்கவேண்டும். அதை நடைமுறைப்படுத்தும் வகையில், அனைத்து ஆட்டோக்களுக்கும், டிஜிட்டல் மீட்டர்களை வழங்கவேண்டும் என ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் நான்கு மைதானங்களில் நடைபெற உள்ள டி.என்.பி.எல்; ஜூன் 23ஆம் தேதி துவங்குகிறது