சென்னை: சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில், விக்டோரியா சாம்ராஜ்(77) என்ற மூதாட்டியிடம், கடந்த 6ஆம் தேதி மர்மநபர் ஒருவர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டார். அந்த நபர் மூதாட்டி அணிந்திருந்த 2 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றதில், அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட பொதுமக்கள் மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து, சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட ஜெயபால்(36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான ஜெயபால், பல பேரிடம் லட்ச கணக்கில் கடன் வாங்கி, அதை ரம்மி விளையாட்டில் இழந்துள்ளது தெரியவந்தது.
கடனைத் திருப்பித் தராததால் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே, கே.கே.நகரில் இருந்து கிண்டிக்கு வீட்டை மாற்றிக் கொண்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. கடன் கொடுத்தவர்கள் புதிய முகவரிக்கும் வந்துவிட்டதால், கடனை அடைப்பதற்காகவும், ரம்மி விளையாட்டை தொடர்வதற்காகவும் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் மூதாட்டியிடம் பறித்த தங்க சங்கிலியை கே.கே நகரில் உள்ள அடகு கடையில் வைத்து பணம் பெற்று, அதையும் ரம்மி விளையாட்டில் இழந்ததாக ஜெயபால் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:திண்டுக்கல்லில் நான்கு நாட்களில் 4 கொலைகள் - அச்சத்தில் மக்கள்!