சென்னை: சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “தூத்துக்குடியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் எனது மூத்த வழக்கறிஞரும், திமுக இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளருமான ஜோயலை செல்போனில் தொடர்புகொண்டார்.
தனது குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், குழந்தையைக் காப்பாற்ற பணம் தேவைப்படுவதாகவும் கூறினார். மேலும், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தங்களிடம் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அனுப்பியதாகக் கூறிய அவர் மருத்துவமனையிலுள்ள அவரது குழந்தையின் புகைப்படம், மருத்துவச் சீட்டு உள்ளிட்டவற்றை அனுப்பி உதவி கேட்டார்.

இதனை நம்பிய ஜோயல் கூகுள் பே மூலமாக நாகராஜனுக்கு 15ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார். பின்னர் இது குறித்து ஜோயல், உதயநிதி ஸ்டாலினிடம் தகவல் தெரிவிக்க பேசியபோது, தான் எந்த நபரையும் அனுப்பவில்லை என உதயநிதி கூறினார். இந்த மோசடி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மோசடியில் ஈடுபட்டவர் கைது
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபர் பயன்படுத்திய செல்போன் எண், வங்கி கணக்கை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது, இந்த மோசடியில் ஈடுபட்ட நபர் புதுச்சேரியைச் சேர்ந்த சிவகுமார் என்கிற ஜேக்கப் (41) எனத் தெரியவந்தது. பின்னர், புதுச்சேரி விரைந்த காவல் துறையினர், சிவகுமாரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து, சிவக்குமாரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிவகுமார் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரிடம் சிறு சிறு வேலைகளை செய்து கொண்டு இருந்து வந்துள்ளார். ஆன்லைனில் ரம்மி சூதாட்டத்தில் மூழ்கியவரான சிவக்குமார் சம்பாதிக்கும் பணத்தை விளையாட்டிலேயே இழந்து வந்துள்ளார்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இவரது குழந்தை உடல்நிலை சரியில்லாமல் பிறந்தபோது மருத்துவ சிகிச்சைக்காக பணத்தேவை ஏற்பட்டது. இதனால், சிவகுமார் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரை நாடி, குழந்தையின் புகைப்படம், மருத்துவச் சீட்டு உள்ளிட்டவற்றை காண்பித்தபோது அவர் பணம் அளித்து உதவி செய்துள்ளார்.
அரசியல் தலைவர்களிடம் மோசடி
குழந்தையின் புகைப்படத்தை அனுப்பி உதவி கேட்டால் பணம் கிடைக்கும் என்பதை அறிந்த சிவகுமார் இதையே தொழிலாக மாற்றியுள்ளார். அரசியல் பிரமுகருடன் சிவகுமார் பணிபுரிந்ததால் முக்கிய அரசியல் தலைவர்களின் தொலைபேசி எண்கள் எளிதாக அவருக்குக் கிடைத்துள்ளது.
அந்த எண்களை வைத்து இதே பாணியில் மருத்துவமனையிலுள்ள குழந்தையின் புகைப்படம், மருத்துவச் சீட்டு ஆகியவற்றை அனுப்பி பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலையிடம் 17ஆயிரம் ரூபாய், காங்கிரஸ் எம்பி விஜய்வசந்திடம் 8ஆயிரத்து 600 ரூபாய், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் 5ஆயிரம் ரூபாய் என மொத்தம் 30க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி பிரமுகரிடம் 5 லட்சம் ரூபாய் வரை பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

குற்றவாளி சிறையில் அடைப்பு
குறிப்பாக கட்சியின் முக்கிய தலைவர் பணம் பெற்றுக் கொள்ளுமாறு கூறியதாக பொய் கூறி, கட்சிப் பிரமுகர்களிடம் சிவக்குமார் பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. பிரமுகர்களிடம் இருந்து பெற்ற பணத்தை சிவகுமார் ஆன்லைன் ரம்மி விளையாடி இழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த ஒன்றரை வருடமாக முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்களிடம் பணமோசடி செய்து வந்த சிவகுமார், ஜோயலிடம் பணமோசடி செய்தபோது சிக்கிக்கொண்டார். இதனையடுத்து மோசடிக்குப் பயன்படுத்திய இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவற்றை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். விசாரணைக்குப் பிறகு சிவக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிங்கமுத்து மீது நில மோசடி வழக்கு: விசாரணைக்கு ஆஜராகாத வடிவேலு