சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. எஸ்டேட் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் திருடு போனதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுகுறித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குத் தொடர்பாக, ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள், என கிட்டத்தட்ட 230-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.
மேலும் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர்கள், குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மனோஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், கோடநாடு கொலை - கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
மேல்விசாரணை நடத்தப்பட்டதில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துகள் மற்றும் புதிய தகவல்கள் தெரியவந்துள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, வழக்கின் விசாரணை நிலைகுறித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 16ஆம் தேதி தள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என்ற நீதிபதி உத்தரவு ரத்து - தீர்ப்பின் முழுவிவரம்