தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள தங்கமணி, வேலுமணி ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். முதலமைச்சருக்கு நெருக்கமான இருவரும் அரசின் முக்கிய முடிவெடுக்கும் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்பார்கள். இந்நிலையில், தங்கமணி முதலமைச்சர் பங்கேற்கும் விழாக்களில் சமீபகாலமாக தலைகாட்டாமல் இருந்துவந்தார். வேலுமணி மட்டுமே பல நிகழ்ச்சிகளுக்கு சென்றுள்ளார். முதலமைச்சர் வெளிநாடு சென்று திரும்பிய பின் நடைபெற்ற விழாக்களிலும் தங்கமணியை பார்க்க முடிவதில்லை.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வருவாய் துறை, உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை அமைச்சர்கள் மற்றும் அத்துறைகளின் செயலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய முக்கிய துறையான மின்சார துறையின் அமைச்சர் தங்கமணி சென்னையில்தான் உள்ளார். ஆனாலும்கூட முதலமைச்சரின் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் கோட்டை வட்டாரத்தில் தங்கமணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்குக் காரணம் இருக்கிறது என்கிறார்கள்.
இரட்டை சகோதரர்கள் போல் இருந்துவந்த அமைச்சர் வேலுமணிக்கும், தங்கமணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என தகவல் கசிகிறது. இதற்குக் காரணம் அமைச்சர் தங்கமணியின் ஒரு செய்தியாளர் சந்திப்புதான் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
அதன்படி, கடந்த வாரம் அமைச்சர் தங்கமணி சென்னையில் நடந்த மின் விபத்து குறித்து பேசியபோது, மாநகராட்சியின் தவறான செயலால்தான் இறப்பு ஏற்பட்டது எனத் தெரிவித்தார். இதற்கு அமைச்சர் வேலுமணி, தங்கமணி கூறியது தவறு என மறுத்துப் பேசினார்.
அதன் வெளிப்பாடுதான் அமைச்சர் வேலுமணி பங்கேற்ற கூட்டத்தில் தங்கமணி கலந்துகொள்ளவில்லை என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், தற்போது அமைச்சர்கள் தங்கமணி-வேலுமணி ஆகிய இருவரிடையே உரசல் ஏற்பட்டுள்ளது என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளதாக கூறப்படுகிறது.