முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தேர்தல் பரப்புரையின் போது அவதூறாகப் பேசியதாக, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது புகார் எழுந்தது. இதையடுத்து, முதலமைச்சர் பழனிசாமி உண்மையிலேயே மனம் வருந்தியிருந்தால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், அவரது தாயாரை இழிவுபடுத்துவது தன் நோக்கமல்ல எனவும் ஆ.ராசா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆ.ராசாவின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு ராசா தரப்பில் இன்று தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆ.ராசா தரப்பில் திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த பச்சையப்பன், தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் நேரில் விளக்கக் கடிதத்தை அளித்தார்.
அதில், “திராவிட இயக்கத்தில் வளர்ந்த நான் ஒருபோதும் பெண்மையையும் தாய்மையையும் குறைத்து பேசியதில்லை, பேசுபவனும் இல்லை. என்னுடைய பேச்சு திரிக்கப்பட்டு அரசியல் காரணங்களுக்காக உள் அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு அதிமுக-பாஜகவினரால் தேர்தல் நேரத்தில் ஆதாயத்திற்காக பேசப்படுகிறது. எனவே, அதிமுகவினர் அளித்துள்ள புகார் நகலையும், மற்றும் தேர்தல் ஆணையம் கவனத்திற்கு எடுத்துக் கொண்டுள்ள முழு விவரங்களையும், எனக்கும் அளிக்க வேண்டும். அவற்றை பெற்றபின் இவ்விவகாரம் குறித்து முழு விளக்கம் அளிக்கிறேன்” என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'பணத்துக்காக விலை போனால் பெரிய கட்சிகளுக்கு அடிமையாகிப் போவீர்கள்'