தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் முகக்கவசம் வழங்குதல், கபசுர குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள், நடமாடும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று (ஜூலை 5) மட்டும் 15 மண்டலங்களில் நடைபெற்ற 358 மருத்துவ முகாமில் 17 ஆயிரத்து 571 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 1,276 நபர்கள் சிறு அறிகுறி இருந்ததால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் அதிகபட்சமாக திரு.வி.க நகரில் 43 மருத்துவ முகாம்களும், ராயபுரத்தில் 47 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.
மேலும், இன்று இதுவரை இல்லாத வகையில் 558 மருத்துவ முகாம்கள் நடத்தப்போவதாகவும், அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 62 முகாம்களும், அண்ணாநகர்ப் பகுதியில் 58 முகாம்களும், ராயபுரம் பகுதியில் 53 முகாம்களும் நடைபெறவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.