சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகரில் வசித்துவருபவர் ராகேஷ் (40). இவர் அதே பகுதியில் இயங்கிவரும் மீனாட்சி மருத்துவக் கல்லூரியை நிர்வகித்துவந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி இரவு ராகேஷ் குடும்பத்துடன் வீட்டிலிருந்தபோது திடீரென்று ராகேஷின் நண்பர் ராம் சுப்பிரமணியம் மற்றும் சுமார் எட்டு பேர் வீட்டினுள் நுழைந்து தாங்கள் சிபிஐ அலுவலர்கள் என அடையாள அட்டையைக் காண்பித்துள்ளனர்.
பின்னர் வீட்டிலிருந்த பணியாளர்களை அடித்து வெளியே தள்ளி தாழ்ப்பாள் போட்டுவிட்டு சிலைக்கடத்தல் வழக்கில் ராகேஷுக்குத் தொடர்பு இருப்பதாகவும், வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதனால் கைதுசெய்ய உள்ளதாக ராகேஷை மிரட்டியுள்ளனர். இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றால் 10 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என ராகேஷிடம் கேட்டு அறையில் அடைத்துவைத்துள்ளனர்.
அப்போது சந்தேகமடைந்த குடும்பத்தினர் உடனே காவல் துறையினருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரவாயல் காவல் துறையினர் வீட்டிற்குள் இருந்தவர்களை மடக்கிப் பிடித்தனர். அதில் இரண்டு நபர்கள் தப்பியோடிவிட்டனர்.
பிடிப்பட்ட ஐந்து நபர்களிடம் நடத்திய விசாரணையில் போலி சிபிஐ அலுவலர்கள் எனத் தெரியவந்தது. மேலும் ராகேஷின் நண்பரான ராம் சுப்பிரமணி என்பவர் ராகேஷிடம் அதிக பணம் இருப்பதாகவும், சிபிஐ அலுவலர்கள்போல் நடித்தால் பணம் பறிக்கலாம் எனவும் சதித் திட்டம் தீட்டி அழைத்துவந்ததாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.
அதனடிப்படையில் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கேமரா மேன் ராம சுப்பிரமணியம், குன்றத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் நரேந்திர நாத், அனகபுத்தூரைச் சேர்ந்த ஸ்டாலின் (40), யோவான், சங்கர் என ஐந்து பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். மேலும் தப்பியோடிய இருவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.