குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க பயன்படுத்துவது, குழந்தை தொழிலாளர்களாக ஈடுபடுத்துவது, திருமணங்களுக்காக கடத்தப்படுவது என குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண ஆப்ரேசன் ஸ்மைல் என்ற திட்டம் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் காவல் உதவி ஆணையர் தலைமையில் இரண்டு காவல் ஆய்வாளர்கள், குழந்தைகள் நல அலுவவலர்களின் கீழ் 24 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆப்ரேஷன் ஸ்மைல் ஸ்பெஷல் டிரைவ் என்ற பெயரில் புதிய விசாரணையை அண்மையில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கிவைத்தார்.
இதில் பிப்ரவரி 1 முதல் 15 ஆம் தேதி வரை நடந்த ரெய்டில் கடத்தப்பட்ட 361 ஆண் குழந்தைகள், 74 பெண் குழந்தைகள் என மொத்தம் 435 குழந்தைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். அதில் காணாமல் போன ஆறு குழந்தையை 24 மணி நேரத்தில் காவல்துறையினர் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் சிறப்பு குழுவிற்கு கிடைக்க பெற்ற தகவலின் பேரில் கொரட்டூர், போரூர் பகுதியில் நடக்கவிருந்த இரண்டு குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆப்ரேஷன் ஸ்மைல் ஸ்பெஷல் டிரைவ் என்ற திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களை காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.
இதையும் படிங்க: பிணையில் வந்து குற்றம் செய்தவர்களுக்கு பிணை ரத்து: காவல் ஆணையர்!