சென்னையை அடுத்த திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (27). இவர் வேலை விஷயமாக சென்னைக்கு வந்து ட்டு மதுரவாயல் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது இளம்பெண் ஒருவர் லிஃப்ட் கேட்டு கையைக் காட்டி வழிமறித்துள்ளார். இதையடுத்து கணேஷ் பைக்கை ஓரம்கட்டி நிறுத்தியுள்ளார். உடனே அந்தப் பகுதியில் மறைந்திருந்த மூன்று இளைஞர்கள் வேகமாக வந்து கணேஷை வழிமறித்து மிரட்டி அவரிடமிருந்த பணம், செல்போனைப் பறித்துள்ளனர்.
அப்போதுதான் அவர்கள் மூவரும் அந்த இளம்பெண்ணின் கூட்டாளிகள் என்று தெரியவந்தது. இதையடுத்து கணேஷ் சத்தம்போட்டு கத்தியதைக் கேட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டுவந்து நான்கு பேரையும் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் இது குறித்து மதுரவாயல் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இளம்பெண் உள்பட நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் மதுரவாயல் அபிராமி நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (25), உதயகுமார் (19), நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி (25), பரசுபாலன் (19) என்பது தெரியவந்தது. இவர்கள் நான்கு பேரையும் கைதுசெய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதேபோல் இவர்கள் வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு