13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (நவம்பர் 10) நடைபெற்றது. அதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதனிடையே, சென்னை சவுகார்பேட்டையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து ஆன்லைன் சூதாட்டம் நடைபெறுவதாக, காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அங்கு அதிரடியாக சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், சூளையைச் சேர்ந்த மையூர், ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த பங்கஜ், கொண்டித்தோப்பைச் சேர்ந்த சந்தீப் குமார், தீரஜ் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது சட்டவிரோதமாக சூதாடுதல், ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், லோட்டஸ்(lotus) என்ற பெயரில் பிரத்யேகமாக செயலி ஒன்றை உருவாக்கியிருப்பது தெரியவந்தது. இந்த செயலியை முக்கிய ஐபிஎல் தரகர்கள் உருவாக்கி, முதலில் பணம் செலுத்தி பாயிண்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும். எவ்வளவு பாயிண்டுகள் வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். அதன் பிறகு ஐபிஎல் ஆட்டத்தில் பங்கேற்கும் இரு அணிகளில் இருந்து களமிறங்கும் வீரர்கள் தேர்ந்தெடுத்து, பந்தயம் கட்டுவார்கள்.
வீரர்கள் விளையாடுவதை பொறுத்து பாயிண்டுகள் ஏறும், அதை பணமாக மாற்றிக்கொள்ளலாம். மேலும் வீரர்கள் எவ்வளவு ரன் அடிப்பார்கள், விக்கெட் எடுப்பார்கள், யார் வெற்றி பெறுவார்கள், டாஸ் யார் வெல்வார் என அனைத்து வகையிலும் பந்தயம் கட்டி விளையாடுகின்றனர். இதுபோல
லட்சக்கணக்கான ரூபாய் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்றதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சூதாட்டத்தில் செயலியை உருவாக்கிய முக்கிய தரகர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இவ்வாறு செயலியை பயன்படுத்தி சூதாட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.