சென்னை விமான நிலையத்துக்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
அப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் சுற்றுலா விசாவில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த சந்திரகுமார் (23), முகமது உசைத் (27) ஆகியோரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். இதில் முன்னுக்குப் பின் முரணாக இவர்கள் இருவரும் பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது தங்க மோதிரம், தங்க சங்கிலி ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பதைக் கண்டறிந்தனர். இவர்களிடம் ரூ. 39 லட்சம் மதிப்பிலான 948 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினர்.
இதேபோல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த தஞ்சாவூரைச் சேர்ந்த மாதவன் (21) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது தங்க வயரை மறைத்து வைத்து கடத்தி வந்ததைக் கண்டுபிடித்தனர். இவரிடமிருந்து 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான 398 கிராம் தங்க வயர்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த சுப்பிரீத் சிங் (32), தமன் பிரீத் சிங் (25) ஆகியோரின் உடமைகளை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்யப்பட்டது. அதில் எதுவும் இல்லாததால், இருவரும் தனியறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டனர்.
இதையடுத்து அந்த வாலிபர்கள் இரண்டு பேரும் தங்களது தலை மற்றும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இவர்களிடமிருந்து 74 லட்சம் ரூபாய் மதிப்பில் 1 கிலோ 800 கிராம் தங்கம் கைபற்றப்பட்டது.
ஒரே நாளில் ஐந்து பேரிடமிருந்து ஒரு கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்று கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கடத்தல் தொடர்பாக பஞ்சாப் வாலிபர்கள் சுப்பிரீத் சிங், தமன் பிரீத் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.