சென்னை: மெரினா கடற்கரைச் சாலையில் கடந்த 19ஆம் தேதி 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இது குறித்து அனைத்து காவல் நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களைக் கைது செய்ய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார். அதனடிப்படையில் மெரினா கடற்கரையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
37 இளைஞர்கள் கைது: பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பைக் சாகசத்தில் ஈடுபடுவதும், இரவு நேரங்களில் குழுக்களாகப் பிரிந்து மெரினா கடற்கரை சாலைகளில் மட்டுமில்லாது ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர். ஆகியப் பகுதிகளிலும் பைக் சாகசத்தில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவந்தது. எனவே, இதைத்தடுக்கும் விதமாக இரவு நேரங்களில் முக்கியமான சாலைகளில் பேரிகார்டு அமைத்தும், மேம்பாலங்களை மூடியும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி கடந்த 10 நாட்களில் மட்டும் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 37 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் 2 சிறுவர்கள் அடங்கும் எனப் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
எச்சரித்து விடுதலை: இந்நிலையில் பைக் ரேஸ் மற்றும் சாகசத்தைக் கட்டுப்படுத்த நேற்று (மார்ச் 30) முதல் புதிய நடைமுறையைப் போக்குவரத்து போலீசார் கொண்டு வந்துள்ளனர். அதாவது, பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருதி, 1 ஆண்டு பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து பெற முடிவு செய்துள்ளனர்.
அந்த பிரமாணப் பத்திரத்தை மீறினால் இளைஞர்கள் சிறைக்கு செல்வார்கள் எனப் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்று பைக் சாகசத்தில் ஈடுபட்ட சேத்துப்பேட்டைச் சேர்ந்த முருகேசன்(19) என்பவரிடம் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து பெற்று அனுப்பி வைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.
கைது நடவடிக்கை தொடரும்: இது மாதிரியான பைக் சாகசத்தில் சிறுவர்கள் ஈடுபட்டால், அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனப் போக்குவரத்து காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களின் கைது நடவடிக்கை தொடரும் எனப்போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமில்ல்லாமல், அதிக சத்தம் எழுப்பக்கூடிய வாகனங்களைத் தயார் செய்து தரக்கூடிய மெக்கானிக் கடைகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இளைஞர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்: பைக் சாகசங்கள் செய்வதால் ஏற்படும் இழப்புகளையும், அதனால் வரும் பாதிப்புகளையும் அறிந்து அதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிற இளைஞர்களே கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள்; இதில் செலவிடும் துணிச்சல்களை சிறிதேனும் உங்கள் குடும்பத்திற்காகவும் ஏன் உங்களின் நல்ல எதிர்காலத்திற்காகவும் கல்வி அறிவைப் பெற முயலுதல், வேலை வாய்ப்புகளைத் தேடி சென்று அதில் வெற்றி காணுதல், தங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு துறையில் முழுமையான ஈடுபட்டுடன் செயலாற்றி வெற்றியை சொந்தமாக்க எண்ணுங்கள். வாழ்க்கை சிறப்பானதாக அமையும். பைக் சாகசத்தில் ஈடுபடத் துணிந்தவர்களுக்கு இது போன்ற செயல்கள் ஒன்றும் கடினமானவை அல்ல; அதே நேரத்தில் இவை யாவும் பைக் சாகசத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு மட்டுமில்லை; இளைஞர்கள் அனைவருக்கும் தான் இது பொருந்தும்.
இதையும் படிங்க: "நீங்க தான் அதற்கு சரியான ஆள்"- ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கும் யெச்சூரி