சென்னை: நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7ஆம் தேதி வெளியானது. அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 17,972 பேர் தேர்வுக்குப் பதிவு செய்திருந்தனர். எனினும் இவர்களில் 12,840 பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான நாளில், அரசுப்பள்ளி மாணவர்கள் பெருமளவில் தோல்வி அடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியது.
இதை உறுதி செய்திடும் வகையில், தற்போது உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தேர்வு எழுதிய மாணவர்களில் 35 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிக்குரிய தகுதி மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். 65 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து தேர்வு எழுதிய மாணவர்களில், 4ஆயிரத்து 447 மாணவர்கள் மட்டுமே தகுதிபெற்று இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 முதல், 25 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிபெற்றுள்ளனர். மிகக் குறைவாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
கல்வியில் எப்போதும் பின்தங்கிய மாவட்டமாக இருக்கும் விழுப்புரம் மாவட்டம், இந்த முறை நீட் தேர்வில் 100 விழுக்காடு அளவிற்கு தேர்ச்சி பெற்று சாதனைப்படைத்திருக்கிறது. இந்த மாவட்டத்தில் 131 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 131 மாணவர்களுமே தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
இதே போன்று, விருதுநகர், நீலகிரி, சேலம் , பெரம்பலூர், மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும் தேர்வெழுதிய மாணவர்கள் அனைவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாவட்டத்தில் தேர்வெழுதிய 172 பேரில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதமாற்றம் செய்யப்படவில்லை - மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கத்தயாராகும் அலுவலர்கள்