சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் மாபெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘அண்ணாமலை’ வெளியாகி இன்றோடு 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை அவரது ரசிகர்கள் இணையத்தில் 30 Years Of Annamalai என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டாரின் தீம் மியூசிக்: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் அண்ணாமலை. 1992ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது. தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்திருந்தார்.
ரஜினியின் மற்ற படங்களை விடவும் ‘அண்ணாமலை’ படத்துக்கு தனி சிறப்பு ஒன்று உண்டு. திரையில் ரஜினி பெயர் வரும்போது ‘அண்ணாமலை’ தீம் மியூசிக்தான் பின்னாளில் பயன்படுத்தப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.
ரஜினி ஸ்டைல் & மாஸ்: முதல் பாதியில் பால்காரராக வரும் அப்பாவி ரஜினியின் ட்ரான்ஸ்பர்மேசன் காட்சி, இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறது.
யாரிடமாவது சவால் விட வேண்டும் என்றால், உன் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோன்ற காட்சி தான் நினைவுக்கு வந்து போகும். வெற்றி நிச்சயம் எனும் உத்வேகமளிக்கும் பாடல் அதற்கு உறுதுணையாக இருக்கும்.
இரண்டாம் பாதியில் ரஜினி பணக்காரரான பின் வரும் காட்சிகள் மரண மாஸாக இருக்கும். சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று வந்து ‘மலைடா அண்ணாமலை’ என ரஜினி சொல்லும் போது ரசிகர்களுக்கு சிலிர்க்காமல் இல்லை. இப்படி இந்தப் படத்தை பல வகையில் சிலாகித்துக் கொண்டே போகலாம்.
இதையும் படிங்க: HBD Vijay: 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் 'தளபதி'யாய் நீடிக்கும் விஜய்!