தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு படை, வீடியோ பதிவு செய்யும் குழு, கணக்கீட்டு குழு உள்ளிட்ட 5 வகை குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படை குழுவினர், 3 நிலை கண்காணிப்பு குழுவினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், அரசு மற்றும் பொது இடங்களில் இருந்து 61 ஆயிரம் போஸ்டர்கள், பேனர்கள் போன்றவை நீக்கப்பட்டு 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதே போல தனியார் பொது இடங்களில் 21 ஆயிரம் போஸ்டர்கள், பேனர்கள் நீக்கப்பட்டு, அது தொடர்பாக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தேர்தல் பணிக்காக மொத்தமாக 330 கம்பெனி துணை ராணுவப்படையினர் கோரப்பட்டுள்ளது. தற்போது வரை 45 கம்பெனி துணை ராணுவப்படையினர் வந்திருக்கின்றனர். தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு மூலம் வாக்களிப்ப்பதற்கு வசதியாக அவர்கள் இல்லத்திற்கே சென்று அதிகாரிகள் அறிவுறுத்துவார்கள். 12 டி படிவங்களை பூர்த்தி செய்பவர்கள் தபால் வாக்குகள் அளிக்கலாம். அவர்கள் நேரடியாக சென்று வாக்களிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டிடிவி, கமலுடன் மூன்றாவது கூட்டணியா?