கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் கோவை சீரநாயக்கன்பாளையம் பிரதான சாலையில் உள்ள வீரபத்திர சாமி கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆர்.எஸ்.புரம் போலீசார், அதிவேகமாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர்.
அப்போது அந்த காரில் 216 கிலோ கஞ்சாவும், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்த இருளாண்டி, தர்மர், பந்தீஸ்வரன், சதீஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த கோவை போதை பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், நான்கு பேருக்கும் தலா பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து தண்டனையை எதிர்த்து இருளாண்டி உள்ளிட்ட நான்கு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் சாட்சியங்களில் முரண்பாடுகள் உள்ளதாகவும், விசாரணை நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதாலும் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு சாட்சியங்களில் சிறு முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி இருந்தாலும் , குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூற முடியாது என தெரிவித்து சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ததது.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது... உயர் நீதிமன்றத்தில் வழக்கு