சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர், 2019ஆம் ஆண்டு ஜூன் 23இல் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
பதவிக்காலம் முடிந்தபின் செயற்குழு மூலம், ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபனை தேர்தல் அலுவலராக நியமித்து தேர்தலை அறிவித்தது சட்டவிரோதமானது என்றும், சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டுள்ளதால், முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று நடிகர் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வாக்கு எண்ணிக்கைக்கு மறுப்பு
வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்தும், தேர்தலை நடத்த பாதுகாப்பு கோரியும் பொதுச் செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்குகளில் பதிவாளர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், தேர்தலை நடத்தவும் அனுமதித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டது.
அதன்படி, திட்டமிட்ட தேதியான ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல், வாக்குப்பெட்டிகள் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், 2019 ஜூன் 23இல் நடத்தப்பட்ட தேர்தலில் வாக்குரிமை மறுக்கப்பட்டதாகக் கூறி, நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக்கோரி சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் மேலும் ஒரு வழக்கைத் தொடர்ந்தனர்.
தேர்தல் செல்லாது
அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த தனி நீதிபதி கல்யாணசுந்தரம், 'பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட்டதும், அவர் மூலம் அறிவிக்கபட்டு, நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது' எனவும் கூறி தேர்தலை ரத்து செய்து 2020 ஜனவரி 24ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸை தேர்தல் அலுவலராக நியமித்த நீதிமன்றம், புதிய வாக்காளர் பட்டியலை தயாரித்து, மூன்று மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டார்.
மீண்டும் தேர்தல் நடைபெற்று முடியும் வரை சங்க நிர்வாகத்தை அரசு நியமித்த தனி அலுவலர் தொடர்ந்து கவனிக்க உத்தரவிட்டு நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நடிகர்கள் மேல்முறையீடு
இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் தரப்பில் மேல்மூறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், "நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் செல்லும்" எனக் கூறி தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
மேலும், நீதிபதிகள் கூறுகையில், "சிறப்பு அலுவலரின் பதவிகாலம் ஏற்கனவே முடிந்துவிட்டதால், அவரது நியமனத்தை எதிர்த்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை. கடந்த 2019இல் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டியை வங்கி, தேர்தல் அலுவலர் கோகுல்தாஸிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதன்பின், வாக்கு எண்ணிக்கையை நடத்த தேதியை முடிவு செய்து, வாக்குகளை எண்ணி, நான்கு வாரங்களில் முடிவுகளை அறிவிக்க வேண்டும்" என்றனர்.
இதையடுத்து, நடிகர்கள் பெஞ்சமின், ஏழுமலை ஆகியோர் மேல்முறையீடு செல்ல இருப்பதால் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என அவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மூன்று வாரங்களுக்கு தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் எனவும் தேர்தல் அலுவலருக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மேலும் ஒரு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது