செந்தமிழ் சுரப்பிகள் அகரமுதலி திட்ட இயக்ககம் சார்பில் தமிழ் அகராதியியல் நிறைவுநாள் விழா தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தமிழ் அகராதியியல் புத்தகத்தை வெளியிட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார்.
தமிழ்மொழியில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சொற்கள் குறித்த அரசாணை வெளியிடுவதற்கான சொற்கள் அடங்கிய சிடியை உணவுத் துறை அமைச்சர் காமராஜ் வெளியிட தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன் பெற்றுக்கொண்டார்.
தூய தமிழ் பற்றாளர்கள் திருவாரூர் அரிதாசு, திருச்சி ஆரோக்கிய ஆலிவர் ராஜா, கோயம்புத்தூர் மணிகண்டன் ஆகியோருக்கு உணவுத் துறை அமைச்சர் காமராஜ், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே. பாண்டியராஜன், "தமிழ் அகராதியில் நாள் கொண்டாடப்பட்டது. தமிழ் சொற்குவை திட்டத்தில் பல்வேறு புதிய சொற்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை அரசாணையாக வெளியிட உள்ளோம். தமிழ் மொழி பற்றாளர் விருது இந்தாண்டு மூன்று நபர்களுக்கு வழங்கப்பட்டது. வரும் ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவர் தேர்வுசெய்யப்பட்டு மொழி பற்றாளர் விருது வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களில் பெயர் பலகையில் தமிழில் எழுத வேண்டும் என்பது 1958ஆம் ஆண்டு போட்ட சட்டம் அப்போதிலிருந்தே சட்டம் நடைமுறையில் உள்ளது. அன்று போடப்பட்ட அபராதத் தொகைதான் இன்றும் நடைமுறையில் உள்ளது.
பெயர் பலகையில் தமிழில் எழுதாமல் இருந்தால் அபராதத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளோம். மிக விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். பெயர் பலகையில் பாதியளவு தமிழிலும், அதற்கு அடுத்த நிலையில் ஆங்கிலத்திலும், மூன்றாவது மொழியினை பயன்படுத்தினால் அதில் பாதியளவு இடம்பெற வேண்டும்.
பெயர் பலகையின் 50 விழுக்காடு இடம் தமிழ் மொழிக்கு இருக்க வேண்டும். இந்தச் சட்டத்தை தற்போது வணிகவரித் துறை மற்றும் தொழிலாளர் நலத் துறை அமல்படுத்திவருகின்றனர். இதனை தமிழ்வளர்ச்சித் துறைக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளோம்.
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைபெறுவதற்குத் தேவையான சில பயிற்சிகளை அளித்துவருகிறோம். தமிழ் படித்தால் வேலை கிடைக்கும் எனத் தெரிவதற்கு அவர்களுக்கு உரிய தனித்துவம்மிக்க துறைகளில் பயிற்சி அளிக்கிறோம். தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறோம்.
சில அரசு துறைகளில் இன்னும் இல்லாமல் இருக்கிறது. அதனை முழுமையாக செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். கண்டிப்பாகத் தமிழ் படித்தால் வேலை கிடைக்கும் என்பதை உருவாக்க துறை சார்ந்த சில நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம்" எனத் தெரிவித்தார்.