சென்னை: கேரள மாநிலம், திருச்சூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் இரவில் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர், ரயில் மூலம் தப்பித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருவதாக திருச்சூர் போலீசார், சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் பத்மா கர் தலைமையிலான ரயில்வே பாதுகாப்புப் படையினர், கேரள மாநிலம் திருச்சூர் குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து தீவிர சோதனை செய்தனர்.
அப்பொழுது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பத்தாவது நடைமேடையில் ஹவுராவில் இருந்து சென்னை வந்த ரயிலில் மேற்கு வங்காள மாநிலம், பூர்ப மெடினிப்பூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் மக்பூல் மற்றும் கொல்கத்தா பகுதியைச் சேர்ந்த முகமது கவுசர் ஷேக் ஆகிய இருவரும் மறைந்து இருந்துள்ளனர்.
பின்னர், கேரள மாநிலம் திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் பத்மா கர் தலைமையிலான ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்ட பின்னர், கேரள மாநிலம் திருச்சூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதனைத்தொடர்ந்து பிடிபட்ட இருவரையும் கேரள போலீசார் திருச்சூர் பகுதியில் இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 30 லட்சம் ரூபாய் திருடிச்சென்ற வழக்குத்தொடர்பாக இருவரையும் கைது செய்து, கேரள மாநிலம் திருச்சூர் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: வீடியோ: பட்டாக்கத்தியால் தாக்க வந்தபோதும் பதறாமல் மடக்கிபிடித்த போலீஸ்