சென்னையில் கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தரமற்ற, காலாவதியான தண்ணீர் கேன்கள், விற்பனைக்கு வருவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு தகவல் வந்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், இன்று காலை முதற்கட்டமாக, கோயம்பேடு ரோகிணி திரையரங்கு அருகே ஏழு மினி வேன்களில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் கேன்களை சோதனை அலுவலர்கள் செய்தனர். அதில், 680 கேன்களில் 180 காலாவதி, தரமற்ற தண்ணீர் கேன்கள் என கண்டறியப்பட்டது.
மேலும் 200-க்கும் மேற்பட்ட கேன்களில் போலியான தண்ணீர் நிறுவன லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலாவதி, தரமற்ற தண்ணீர் கேன்களுடன் அவை கொண்டுவரப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணைக்காக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.