சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை வெளிநாடு உட்பட பல மாநிலங்களிலிருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் மீட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு மே முதல் ஏப்ரல் 2021ஆம் ஆண்டு வரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 80 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
9 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த 07.05.2021 முதல் 18.04.2022 வரை 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதில் 141 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு பல கோடி மதிப்புள்ள பழமை வாய்ந்த சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதாவது 500 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் சிலை, 4 அடி உயரம் கொண்ட 5 கோடி மதிப்பிலான கஜ சம்ஹர மூர்த்தி சிலை, பத்துத் தலைக்கொண்ட ராவணன் உலோக சிலை, 4 அடி உயரமுடைய சிவன் சிலை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவிலிருந்து இரண்டு தொன்மையான ஞானசம்பந்தர் உலோகச் சிலைகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது சிலைகள் டெல்லியில் இந்திய தொல்லியல் துறை வசம் உள்ளது. மேலும் ஒரு ஆஞ்சநேயர் சிலை வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பாக பணிபுரிந்து பல சிலைகளை கண்டுபிடித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி ஆகியோர் வெகுமதி, சான்றிதழ் வழங்கினர்.
இதையும் படிங்க: ரூ.12 கோடி மதிப்புள்ள மூன்று சிலைகள் பறிமுதல்