இது குறித்து மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
'கடலூர் மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள தாழங்குடா கிராமத்தில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு மிகவும் பாதிப்படைந்துள்ளது. தென்பெண்ணையாற்று முகத்துவாரம் மணல் திட்டுக்களால் அடைபட்டுள்ளதால், புயல் காலங்களில் மீன்பிடி படகுகளை ஆற்றுக்குள் கொண்டுசென்று பாதுகாப்பாக நிறுத்த முடியாமல் படகுகள் சேதமடைவதால்
- தென்பெண்ணையாற்று முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைத்து தரவும்,
- இப்பகுதியில் ஏற்படும் கடல் அரிப்பினை தடுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்பன இப்பகுதி மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதனை நிறைவேற்றும்விதமாக 2020-21ஆம் நிதியாண்டில் கடலூர் மாவட்டம், தாழங்குடா கிராமத்தில் ரூ.13.06 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்புப் பணி, மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மீன்வளம் மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தற்போது, தமிழ்நாடு அரசால் இப்பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் நிலையிலுள்ளன.
இப்பணிகள் நிறைவேற்றப்படுவதால் கடல் அரிப்பு தடுக்கப்பட்டு, தாழங்குடா கிராமம் இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கப்படுவதோடு, மீனவர்கள் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தவும் வழிவகை ஏற்படும்'
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.