சென்னை ஐஐடியில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் பல்வேறு துறைகளில் பட்டம் பெற்ற பட்டதாரிகள், அலுவலகப் பணிகளில் உள்ளவர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் (B.Sc - Programming and Data Science) ஆகிய துறைகளில் பட்டம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு ஒன்று வெளியாது.
அதில், 'ஐஐடியின் பிஎஸ்சி டேட்டா சயன்ஸ் படிப்புக்கான சேர்க்கை 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நடைபெற்று வருகிறது. மேலும் கல்லூரி மாணவர்கள், பணியில் இருப்பவர்கள், பணித் துறை மாற்றம் நாடுவோரும் விண்ணப்பிக்கலாம். இதன் மே 2022 பருவத்துக்கான விண்ணப்பங்கள் இப்போது வரவேற்கப்படுகின்றன.
பள்ளியில் பயிலும்போதே ஐஐடி மெட்ராஸில் சேர்க்கை பெற்று, மாணவர்கள் தங்கள் மீதுள்ள அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ள ஒரு வாய்ப்பளிக்கும் வகையில், இதன் தகுதிச் சுற்றுக்கு விண்ணப்பிக்க 11ஆம் வகுப்பு மாணவர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். மே 2022இல் 11ஆம் வகுப்பை முடிக்கும் மாணவர்களும், தற்பொழுது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் , மே 2022-க்கான தகுதிச் சுற்றுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதி பெற்றால் தங்கள் 12ஆம் வகுப்பை முடித்து விட்டு, இந்தப் படிப்பைத் தொடங்கலாம்.
ஆன்லைனில் பட்டம் பெறலாம்: இந்தப் படிப்பிற்கு தகுதி பெறும் யாரும் இதில் சேரலாம். JEE அட்வான்ஸ்ட் 2021 தேர்வுக்குத் தகுதி பெறும் மாணவர்கள் நேரடியாக மே 2022ஆம் ஆண்டு இந்த பிஎஸ்சி - இளங்கலை படிப்பில் சேரலாம். பிஎஸ்சி டேட்டா சயன்ஸ் படிப்பின் மே பருவத்தில் சேர ஏப்.25ஆம் தேதிக்குள் விருப்பமுள்ள மாணவர்கள் https://onlinedegree.iitm.ac.in/ என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களை தமிழ் மாெழியிலும் தொிந்துக் கொள்ளலாம்' என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி பிஎஸ்சி புரோக்ராமிங்க் மற்றும் டேட்டா சயன்ஸ் (B.Sc - Programming and Data Science) இளங்கலைப் படிப்பின் பொறுப்பாளர் ஆண்ட்ரூ தங்கராஜ் கூறும்போது, 'ஐஐடியில் படிக்க வேண்டும் என்ற கனவுடனும் புரோகிராமிங் மற்றும் டேட்டா சயன்ஸ் துறையில் பணிபுரிய வேண்டும் என்ற விருப்பத்துடன் இருக்கும் யாருக்கும் உயர் தர கல்வியை, இந்தத் திட்டத்தின் மூலம் உறுதி செய்ய விரும்புகிறோம். இது கல்வித் துறையில் பெரிய புரட்சியாக இருக்கும்' என்றார். இந்த இளங்கலைப் பட்டப்படிப்புக்கான தகுதிச் சுற்றுக்கு, இது வரை 60,000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. தற்சமயம், 12,500-க்கும் அதிகமான மாணவர்கள் இந்தியா மற்றும் வெளி நாடுகளிலிருந்து இத்திட்டத்தில் பயின்று வருகின்றனர்.
சிறப்பம்சங்கள்: 18 முதல் 65 வயது வரையிலான வணிகம், கலை, அறிவியல், பொறியியல், மேலாண்மை, மருத்துவம், சட்டம் என அனைத்து துறையில் பட்டம் பெற்றவர்களும் பங்கேற்கலாம், அது மட்டுமில்லாமல், பல்வேறு துறைகளில் பணிபுரிவோரும், 25-க்கும் அதிகமான பிற நாடுகளிலுள்ள மாணவர்கள் பயிலுவதற்கான வசதிகள் ஆகியன இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்களாகும்.
75 % கட்டண சலுகை: இந்த திட்டத்தில் அதிகளவில் மாணவர்கள் சேரும் வகையில், தகுதியானவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. வாரம் தோறும் பாடங்கள், அதற்கான போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் பார்க்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. தேர்வு மட்டும் நேரடியாக, நாட்டின் பல நகரங்களிலும் 13-க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்படுகின்றது.
இது கற்றலின் மதிப்பீட்டை நம்பிக்கைக்கு உரியதாக்குகிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானத்தைப் பொருத்து, 75 % வரை கட்டணச் சலுகையை வழங்குகிறது. இதைத் தவிர, சிஎஸ்ஆர் பங்குதாரர்கள் மூலம் கூடுதல் உதவித் தொகைகளும் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பச் செயல்முறை 4 வாரப் பயிற்சியை அளிக்கிறது. இதில் வீடியோ விரிவுரைகள், வாராந்திர பணிகள், கலந்துரையாடல் மன்றம் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் பாட பயிற்றுவிப்பாளர்களுடன் நேரடித் தொடர்புகள் ஆகியவை அடங்கும். இதற்கு விண்ணப்பதாரர்கள் தகுதித் தேர்வை நேரில் எழுத வேண்டும்.
இது இந்த 4 வார உள்ளடக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது மற்றும் குறைந்தபட்ச கட்-ஆப்பை விட அதிகமான மதிப்பெண் பெற்றால், பிஎஸ்சி புரோகிராமிங் மற்றும் டேட்டா சயன்ஸின் அடிப்படைத் திட்டத்தில் சேரலாம்.
இதையும் படிங்க: நீலகிரி ராணுவ மையத்தில் குதிரை சாகசப் போட்டி