சென்னை : திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “தமிழ்நாட்டில் நாளை (அக்.12) அனைத்து மாவட்டங்களிலும் 50 இடங்களில், “கலைஞரின் வருமுன் காப்போம்” திட்டத்தின் மூலம் 1250 முகாம்கள் 20க்கும் மேற்பட்ட மருத்துவ பிரிவில் காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை நடைபெற உள்ளன.
தடுப்பூசி பணிகள் துரிதம்
இந்த முகாமில் மூலம் தடுப்பூசி அளித்தல் மற்றும் பல்வேறு சிகிச்சைகள் மற்ற பரிசோதனைகளை பொதுமக்கள் செய்து கொள்ளவும், மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 1,777 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் 2747 நபர்களுக்கும் 2.40 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும், 4.68 லட்சம் பாலூட்டும் தாய்மார்களுக்கும் 3.96 லட்சம் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு கோரிக்கை
11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் 7 மருத்துவக் கல்லூரிகளில் 850 இடங்களுக்கான ஒப்புதல் மத்திய அரசு ஏற்கனவே வழங்கி உள்ளது. அதில் நான்கு கல்லூரிகளில் 100 இடங்கள் வரையிலான சேர்க்கைக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 கல்லூரிகளுக்கு சேர்க்கை அனுமதி கிடைக்கவில்லை.
தற்போது அனுமதி கொடுக்கப்பட்ட கல்லூரிகளில் 3 கல்லூரிகளின் சேர்க்கையை 100இல் இருந்து 150ஆக உயர்த்தவும், அனுமதி கிடைக்காத 4 கல்லூரிகளில் மீண்டும் மறு ஆய்வு செய்து சேர்க்கைக்கு அனுமதி வழங்கவேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் மத்திய குழு ஆய்விற்கு வருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு மருத்துவ முகாம்கள்
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் பிற தொற்றுநோய்கள் பரவாமல் அந்தந்த பகுதிகளில் மருத்துவ சிகிச்சைகள் வழங்க வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ‘ஆட்சியமைத்த நான்கரை மாதத்தில் ஐந்து கோடி தடுப்பூசிகள்’ - மா. சுப்பிரமணியன்