சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், சி.என்.ஜி. ஆகியவற்றின் விலை உயர்வுக்கு தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தனியார் மயமாக்குதலை மத்திய அரசு நிறுத்த வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்த வேண்டும், இந்த திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகைளை வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.
கைது: இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அண்ணா சாலை, தபால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட எல்.பி.எப், சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தொழிற்சங்களின் நாடு தழுவிய போராட்டம் காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
பொதுமக்கள் அவதி: சென்னையில் 3,500 பேருந்துகள் இயங்கும் நிலையில் தற்போது 350 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதேநிலை தான் உள்ளது. வேலைநிறுத்தம் காரணமாக பறக்கும் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும், ஆட்டோ கட்டணம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். தொழிற்சங்கத்தினரின் போராட்டம் காரணமாக அண்ணா சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: நீட் எதிர்ப்பு மசோதா.. அடித்து ஆடும் திருமாவளவன்!