சென்னை: அழகிய கடற்கரைக்கான நீலக்கொடி சான்றிதழை தமிழ்நாட்டிலுள்ள 10 கடற்கரைகளுக்கு பெறும் திட்டத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த சுற்றுச்சூழல் மிக்க அழகிய கடற்கரைக்கான நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு திட்டம் விரிவுபடுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் ஒரு அமைப்பாக விளங்கும் ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மை நிறுவனம் (SICOM), நீலக்கொடி திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரையை தேர்வு செய்து பரிசோதனை திட்ட அளவில், அழகியல் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் 2021-22ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒரு கடற்கரைக்கு பத்து கோடி ரூபாய் வீதம், இரு கடற்கரைகளுக்கு 20 கோடி ரூபாய் செலவில் நீலக்கொடி திட்டம் செயல்படுத்தப்படுவதோடு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக இது விரிவுபடுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.