சென்னை: சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தில் ஒமைக்ரான் தொற்று முன்னச்சரிக்கை காரணமாக வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டும், கரோனா தொற்று இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்வீடன் நாட்டில் வாழும் செங்கல்பட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விடுமுறைக்காக கத்தார் வழியாக சென்னை வந்தனர். கணவன், மனைவி, 6 வயது சிறுவன், 10 வயது சிறுமி ஆகியோருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் தந்தை, தாய், சகோதரர் ஆகியோருக்கு தொற்று இல்லை என்றும், 10 வயது சிறுமிக்கு தொற்று இருப்பதாகவும் பரிசோதனை முடிவில் தெரியவந்தது. உடனே சிறுமி கிண்டி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இதையடுத்து தந்தை உள்பட மூன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். சிறுமிக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'பள்ளி விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்'