துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று காலை சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனை செய்யும் நேரத்தில், ஆண் பயணி ஒருவர் திடீரென கழிவறைக்கு சென்று ஒரு மணி நேரமாக வெளியே வராமல் இருந்தார். பின்னர் கழிவறை கதவைத் தட்டி பயணியை வெளியே வரவழைத்து சோதித்ததில், அவா் வேலூரை சோ்ந்த அஜ்மல்கான்(26) என்பது தெரிந்தது.
அவரை முழுமையாக பரிசோதித்ததில், அவருடைய உள்ளாடைக்குள் 1.5 கிலோ தங்கக்கட்டிகள் மற்றும் தங்க பேஸ்ட்டை மறைத்து வைத்திருந்தாா். அதன் பன்னாட்டு மதிப்பு ரூ.72 லட்சம் ஆகும். இதையடுத்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அஜ்மல்கான் கைது செய்யப்பட்டார்.
அதேபோல் இன்று அதிகாலை சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானத்தில் பயணிக்க வந்த, ராமநாதபுரத்தை சோ்ந்த ரகுமான் ஹமீது (25) என்பவரை சுங்கத்துறையினர் சோதனையிட்டனா். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.7.5 லட்சம் மதிப்பிலான சவுதி ரியால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு ரகுமான் ஹமீதின் பயணமும் ரத்து செய்யப்பட்டு, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: போலி ஆவணங்களைக் கொண்டு பாஸ்போர்ட் பெற்றுவந்த கும்பல் - 6 பேர் அதிரடி கைது!