ஹைதராபாத்: பொதுவாகவே வரி செலுத்துவது என்பது சற்று சிரமமான விஷயம் தான். நம் வயது, வருமானம், சேமிப்பு, முதலீடு, செலவு ஆகியவற்றை பொறுத்தே வரி கணக்கிடப்படுகிறது. சம்பாதிக்கும் வருமானத்துக்கு எவ்வளவு வரி செலுத்த வேண்டும் மற்றும் வரிச்சுமையை எப்படி சமாளிக்கலாம் என்பது அனைவருக்கும் எழும் கேள்வியாகும். சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு முறை அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. இதன் மூலம் எந்தளவுக்கு வரிச்சுமையை குறைக்க முடியும் என்பதை பார்ப்போம்.
கடந்த சில ஆண்டுகளாகவே வருமான வரி செலுத்தும் கட்டமைப்பை எளிதாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
1 சதவீதத்துக்கும் குறைவானவர்கள்: வருமான வரி செலுத்தும் போது பலர் அதில் இருந்து விலக்கு கோருகின்றனர். அவரவர் விருப்பத்தின்படி, பழைய வரி விதிப்பு முறையின் பிரிவு 80C-ன்படி, ரூ.1.5 லட்சம், பிரிவு80Dன்-படி வீட்டுக்கடன் வட்டி ரூ.2 லட்சம் ஆகியவற்றுக்கும் விலக்கு கோருகின்றனர். கடந்த நிதியாண்டில் ரிட்டன் தாக்கல் செய்தவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே புதிய வரி விதிப்பு முறைக்கு மாறியுள்ளனர். முதலீடு செய்ய முடியாதவர்கள் இதை தேர்வு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும் புதிய வரி விதிப்பு முறையை தேர்வு செய்து கொள்வது அவரவர் விருப்பம்.
யாருக்கு விலக்கு?: புதிய வரி விதிப்பு முறையின்படி, ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வருமானம் உள்ளவர்கள், வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. நிலையான விலக்கு தொகையாக ரூ.50,000-க்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.7,50,000 உள்ளவர்கள், வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. அதாவது மாதம் ரூ.62,500 சம்பாதிப்பவர்கள் வரி விலக்கு பெற முடியும்.
குறைவான வரிச்சுமை: வரி செலுத்துவோர் குறைந்த வரி விதிப்பு முறையை விரும்புகின்றனர். அதிக விலக்குகளை பெற விரும்புவோர், பழைய வரி விதிப்பையே விரும்புகின்றனர். எனினும், குறைவான விலக்குகளை விரும்புவோருக்கு புதிய வரி விதிப்பு முறை, கூடுதல் பலன்களை தருகிறது. சிலருக்கு பழைய முறையே பலன் தருவதாக கூறப்படுகிறது. இது வரி சேமிப்பு முதலீடுகள், கல்விக்கடன் வட்டி ஆகியவற்றை பொருத்தது.
அதிகரிக்கும் பணவீக்கம்: தற்போதுள்ள பழைய வரி விதிப்பு முறை கடந்த 2013ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. அதிகரிக்கும் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு வரி செலுத்தப்பட வேண்டும். ஒருவரது ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் என்றால், 20 சதவீத வரி செலுத்தப்பட வேண்டும். ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், 30 சதவீத வரி செலுத்த வேண்டும்.
இதுதொடர்பாக கணக்கிட வருமான வரித்துறை தங்கள் இணையத்தில் தனி கால்குலேட்டரை வழங்கியுள்ளது. அதை பயன்படுத்தி வரி செலுத்துவோர் தங்கள் முடிவை தீர்மானிக்கலாம்.
வரி கணக்கீடு எப்படி?: 2023-24 நிதியாண்டில் உங்களது ஆண்டு வருமானம் ரூ.7.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தால், புதிய வருமான வரி விதிப்பு முறையை தேர்வு செய்வதே சிறந்தது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
அதன்படி வருமான வரி விலக்குகளுக்கான சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. மொத்த வருவாய் என்பது ஊதியம் உட்பட நீங்கள் ஈட்டிய அனைத்து வருமானத்தின் கூட்டுத் தொகையே. இதுதான் மொத்த வருவாய் என அழைக்கப்படுகிறது. வருமான வரிச்சட்டத்தின்படி, விலக்குகளுக்கு பிறகு மீதமுள்ள வருமானத்துக்கே வரி விதிக்கப்படுகிறது.