உடனடியாக உதவி தேவைப்படும் ஏழைகள், இடம்பெயர்ந்தோருக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய், விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் என பல்வேறு அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். இதற்காக, மொத்தம் 1.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்ததுடன் சென்செக்ஸ் ஏற்றத்துடன் முடிவடைந்தது.
இதுகுறித்து ஜியோஜித் நிதி சேவை நிறுவனத்தின் தலைமை முதலீட்டு ஆலோசகர் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக தொழிற்சாலைகளுக்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதிரியான அறிவுப்புகள் தொடரும்" என்றார்.
மும்பை பங்குச்சந்தை 1,564 புள்ளிகள் உயர்ந்து 29,946.77 புள்ளிகளில் நிலைபெற்ற நிலையில், தேசிய பங்குச்சந்தை 322.60 புள்ளிகள் உயர்ந்து 8,641.45 புள்ளிகளில் நிலைபெற்றது. இந்த ஏற்றத்தால், இந்துஸ்இந்த் வங்கி, பார்தி ஏர்டெல், எல்&டி, பஜாஜ் நிதி நிறுவனம், கோடக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் பயனடைந்தன. இருப்பினும், மாருதி சுசுகி, டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் முடிவடைந்தன.
இதையும் படிங்க: அவசர நிதி ரூ.1.7 லட்சம் கோடி: 80 கோடி ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம்