மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (நவ. 24) வர்த்தகமானதைவிட சுமார் 250 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. இருப்பினும், அதன்பின் கொஞ்சம் சரிந்து நண்பகல் வரை வர்த்தகமானது. மதியம் ஒரு மணிக்குப் பிறகு பெரியளவில் சரிவை எதிர்கொண்ட இந்தியப் பங்குச்சந்தையால் அதிலிருந்து மீள முடியவில்லை.
இன்றைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 694.92 புள்ளிகள் (1.56 விழுக்காடு) சரிந்து 44,828.10 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 196.75 புள்ளிகள் (1.51 விழுக்காடு) சரிந்து 12,858.40 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக ஈச்சர் (eicher) மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.72 விழுக்காடு குறைந்தது. மேலும், ஆக்ஸிஸ் வங்கி, கோடாக் வங்கி, சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.
மறுபுறம், ஒஎன்ஜிசி, கெயில், அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ லைஃப், கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.
தங்கம், வெள்ளி விலை
சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 260 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 140 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிலோ 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 84.78 ரூபாய்க்கும், டீசல் 76.01 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதையும் படிங்க: கூகுள் பே மூலம் பணம் அனுப்பினால் கூடுதல் கட்டணமா?