கோவிட்-19 தொற்றால் பெரும் நெருக்கடியைச் சந்தித்துவரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்திய அரசு புதிய திட்டத்தை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டுள்ளன.
அதன்படி, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 483.53 (1.54%) உயர்ந்து 31,863.08 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 126.60 புள்ளிகள் (1.38%) உயர்ந்து 9,313.90 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக கோடாக் வங்கியின் பங்குகள் 8 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்ந்தது. அதைத்தொடர்ந்து டி.சி.எஸ், இன்போசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எச்.சி.எல். டெக் மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகிய நிறுவனங்களின் பங்குள் உயர்வைச் சந்தித்தன.
இறக்கம் கண்ட பங்குகள்
மறுபுறம் டைட்டன், எச்.யூ.எல்., பவர் கிரிட், என்.டி.பி.சி. நெஸ்லே இந்தியா ஆகியவற்றின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
ஏற்றத்திற்கான காரணம் என்ன?
இந்திய பங்குச் சந்தை மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பல பங்குச் சந்தைகள் இன்று ஏற்றம் கண்டன. கடந்த சில நாள்களாகவே சரிவைச் சந்தித்துவந்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்ததே இதற்கு காரணம் என்று ஆனந்த் ரதி ஈக்விட்டி ரிசர்ச் தலைவர் நரேந்திர சோலங்கி கருத்து தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க அரசிடமிருந்த மற்றொரு பொருளாதார மீட்டெடுப்பு திட்டத்தை முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச பங்குச் சந்தை
சர்வதேச அளவில் ஹாங்காங், டோக்கியோ, சியோல் ஆகிய பங்குச் சந்தை ஏற்றத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இருப்பினும் ஷாங்காய் பங்குச் சந்தை இறக்கத்தைக் கண்டது. ஐரோப்பியப் பங்குச் சந்தை வர்த்தக நாள் முழுவதும் ஏற்றத்தையும் இறக்கத்தையும் மாற்றி மாற்றிச் சந்தித்துவருகிறது.
கச்சா எண்ணெய்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 8.64 விழுக்காடு அதிகரித்து 22.13 அமெரிக்க டாலர்களில் வர்த்தகமாகிவருகிறது.
இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு?