கோவிட் 19 (கொரோனா) வைரஸ் தொற்றின் தாக்கம், தற்போது சர்வதேச பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஜனவரி 31ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை மட்டும் ரஷ்யா, பிரேசில், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் 30 விழுக்காடு வரை சரிவைச் சந்தித்துள்ளன.
அதேபோல அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் 20 விழுக்காடு வரை சரிவைச் சந்தித்துள்ளன. இந்த பாதிப்பு, தற்போது இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
இன்று ஒரே நாளில், மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் 10 விழுக்காட்டிற்கு கீழ் சரிவைச் சந்தித்தன. இதன் கரணமாக, இரு பங்குச் சந்தைகளிலும், சுமார் 45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தொடர்ந்து சரிவைச் சந்திக்கும் பங்குச் சந்தைகளை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செபி அறிவித்துள்ளது. மேலும், கடந்த ஒரு மாதமாக இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பது சர்வதேச அளவில் ஏற்பட்ட வீழ்ச்சிகளைவிட குறைவு என்றும் செபி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கொரோனா எதிரொலி - இனி அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும்