மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று நிறைவடைந்ததைவிட 900 புள்ளிகள் உயர்ந்து தனது இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. தற்போது சென்செக்ஸ் 992.91 புள்ளிகள் உயர்ந்து 33,713.07 புள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 289.70 புள்ளிகள் உயர்ந்து 9843.05 புள்ளிகளிலும் வர்த்தகமாகிவருகிறது.
ஏற்றம் கண்ட பங்குகள்
மாருதி நிறுவனத்தின் பங்குகள் ஏழு விழுக்காட்டிற்கும் மேல் உயர்வைச் சந்தித்துள்ளது. அதைத்தொடர்ந்து எம் & எம், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.யூ.எல்., டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளது. அதேநேரம் சன் பார்மா நிறுவனத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
புதன்கிழமை வர்த்தகத்தின்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 722.08 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
காரணம் என்ன?
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் முறையில் ஒரு பெரும் முன்னேற்றம் காணக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் சர்வதேச நாடுகளில் ஊரடங்கு மெள்ள தளர்த்தப்படுவதும் பங்குச்சந்தை ஏற்றத்திற்கான காரணமாகக் கருதப்படுகிறது.
இது தவிர அமெரிக்க மத்திய வங்கி அதன் குறுகிய கால வட்டி விகிதத்தைக் கிட்டத்தட்ட ஜூரோவென்று அறிவித்திருப்பதும் இந்திய பங்குச்சந்தை ஏற்றம் காண உதவியது.
சர்வதேச பங்குச்சந்தை
ஷாங்காய், டோக்கியோ பங்குச்சந்தை ஏற்றம்கண்டது. ஹாங்காங், சியோல் பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை என்பதால் வர்த்தகம் நடைபெறவில்லை. அமெரிக்கா மத்திய வங்கியின் அறிவிப்பைத் தொடர்ந்து அந்நாட்டின் வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையின் நள்ளிரவு வர்த்தகம் பெரும் ஏற்றம்கண்டது.
கச்சா எண்ணெய்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 9.57 விழுக்காடு அதிகரித்து, பேரல் ஒன்றுக்கு 26.55 அமெரிக்க டாலர் என்று வர்த்தகமாகிவருகிறது.
இதையும் படிங்க: ஏழைகளைக் காக்க 65 ஆயிரம் கோடி அவசியம் - ராகுலிடம் ராஜன்