மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று நிறைவடைந்ததைவிட 300 புள்ளிகள் அதிகரித்து தனது வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
சென்செக்ஸ் தற்போது 318.20 புள்ளிகள் அதிகரித்து 32,432.72 புள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 96.30 புள்ளிகள் அதிகரித்து 9477.20 புள்ளிகளிலும் வர்த்தகமாகிவருகிறது.
ஏற்றம்-இறக்கம் கண்ட பங்குகள்
ஹெச்.டி.எஃப்.சி. பங்குகள் அதிகபட்சமாக ஐந்து விழுக்காடு வரை ஏற்றம்கண்டன. அதைத்தொடர்ந்து பஜாஜ் பைனான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, டெக் மஹிந்திரா, எம் & எம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், என்.டி.பி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம்கண்டன. மறுபுறம் இண்டஸ்இண்ட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, டைட்டன், ஹெச்.யூ.எல்., ஆசியன் பெயிண்ட்ஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
அந்நிய முதலீட்டாளர்கள்
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின்போது சுமார் 122.15 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.
காரணம் என்ன?
பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு மற்றுமொரு திட்டத்தை அறிவிக்கும் என்று முதலீட்டாளர்கள் நம்புவதாலும் உலக நாடுகளில் ஊரடங்கு மெதுவாக தளர்த்தப்பட்டுவருவதாலும் பங்குச்சந்தை ஏற்றம் கண்டுவருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர அமெரிக்காவிலுள்ள ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை குறித்து இன்று அறிவிப்பை வெளியிடும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதும் பங்குச்சந்தை ஏற்றம் காண ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
சர்வதேச பங்குச்சந்தை
ஷாங்காய் பங்குச்சந்தை 0.6 விழுக்காடு, ஹாங்காங் பங்குச்சந்தை 0.5 விழுக்காடு, சிட்னி பங்குச்சந்தை 1.1 விழுக்காடு ஏற்றம் கண்டன. சுகாதாரத் துறை நிறுவனங்களின் பங்குகளும் தொழில்நுட்பவியல் நிறுவனங்களின் பங்குகளும் குறைந்ததால் அமெரிக்காவின் வால் ஸ்டீரிட் பங்குச்சந்தையின் நள்ளிரவு வர்த்தகம் சரிவைச் சந்தித்தது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 3.52 விழுக்காடு அதிகரித்து, பேரல் ஒன்று 23.54 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமானது.
இதையும் படிங்க: கச்சா எண்ணெய்: 20 விழுக்காடு விநியோக வீழ்ச்சியால் விலை கடும் சரிவு!