மும்பை: அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள மூன்று முதலீட்டாளர்களின் கணக்கை என்எஸ்டிஎல் (NATIONAL SECURITIES DEPOSITORTY LIMITED - தேசிய பிணையம் வைப்பக நிறுவனம்) முடக்கியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 76 புள்ளிகள் ஏற்றம்கண்டு 52,551 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 12.5 புள்ளிகள் அதிகரித்து 15,811 புள்ளிகளுக்கு வர்த்தகத்தை நிறைவுசெய்துள்ளது.
இதில், அதானி குழும நிறுவன பங்குகள் அதிகமான விலை வீழ்ச்சியைக் கண்டிருக்கின்றன. இந்தியப் பங்குச்சந்தைகளில் அதானி குழுமத்தில்
- அதானி எண்டர்பிரைசஸ்,
- அதானி போர்ட்ஸ்,
- அதானி பவர்,
- அதானி டிரான்ஸ்மிஷன்,
- அதானி கிரீன் எனர்ஜி,
- அதானி டோட்டல் கேஸ்
உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள் உள்ளன.
அதில், அதானி கிரீன் எனர்ஜி மட்டும் 0.68 விழுக்காடு விலை அதிகரித்து 1,226 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. ஏனைய ஐந்து நிறுவனங்களின் பங்குகளும் 4.9 விழுக்காடு முதல் 9.2 விழுக்காடு வரை விலை கடும் சரிவைச் சந்தித்திருக்கின்றன.
- அதானி பவர்,
- அதானி டோட்டல் கேஸ்,
- அதானி டிரான்ஸ்மிஷன்
ஆகியவற்றின் பங்குகள் லோயர் சர்க்கியூட் விலையைத் தொட்டுள்ளன.
அதென்ன சர்க்கியூட் விலை
பங்குச்சந்தைகள் நிர்ணயிக்கும் விலை வரையறை வரம்பைத்தான் சர்க்கியூட் என்கிறார்கள். அதிகபட்ச விலை வரம்பை அப்பர் சர்க்கியூட் என்றும், குறைந்தபட்ச விலை வரம்பை லோயர் சர்க்கியூட் எனவும் கூறுகின்றனர்.
அதானி எண்டர்பிரைசஸ் 5.7 விழுக்காடு சரிந்து 1,510 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. அதானி போர்ட்ஸ் & எஸ்.இ.இசட் நிறுவனம் அதிகபட்சமாக ஒரேநாளில் 9.2 விழுக்காடு விலை சரிவடைந்து 762 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.
அதானி குழுமத்தில் உள்ள நான்கு நிறுவனங்களின் மிக முக்கிய முதலீட்டாளர்களாகப் பார்க்கப்படும்
- அல்புலா இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட்,
- கிரெஸ்டா ஃபண்ட்,
- ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட்
ஆகிய மூன்று நிறுவனங்களின் கணக்கை தேசிய பிணையம் வைப்பக நிறுவனம் முடக்கியுள்ளது.
இந்த மூன்று நிறுவனங்களும் மொத்தம் 43,500 கோடி ரூபாய் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கின்றன. பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பிணையம் வைப்பக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பறிபோகும் அந்த அந்தஸ்து!
தேசிய பங்குச்சந்தையில் வர்த்தக முடிவில் இந்தப் பங்கின் விலை 91 குறைந்து 1,510.35 ஆக சரிவடைந்தது. முந்தைய நாள் வர்த்த முடிவில் பங்கின் விலை 1601.60 ஆக இருந்தது.
பங்கின் விலை சரிவடைந்ததன் மூலம் அதானியின் சொத்து மதிப்பில் 73,250 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற அந்தஸ்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
அதானியும் சொத்து மதிப்பும்
குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் அதானி ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
- இவருடைய தனிப்பட்ட சொத்து மதிப்பு - 5.64 லட்சம் கோடி ரூபாய்
- அதானி குழுமங்களின் மொத்த சந்தை மூலதனம் - 9.5 லட்சம் கோடி ரூபாய்.