இந்தியாவில் கரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மார்ச் 24 நள்ளிரவு முதல் மே 31 வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அதை மீட்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்து வருகிறது.
கடைசியாக ரூ.20 லட்சம் கோடி மதிப்புள்ள சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்தத் தொகுப்பு குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகையில், மூன்று மாதங்களுக்கு பிஎஃப் பிடித்தத் தொகையை 12 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாகக் குறைப்பதாக அறிவித்தார்.
இதன்படி, தொழிலாளர்கள் தரப்பிலிருந்தும் நிறுவனங்கள் தரப்பிலிருந்தும் செலுத்தப்படும் பங்களிப்புத் தொகை 10 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் கையில் பெறும் சம்பளத்தின் அளவு அதிகமாக இருக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
ஆனால், ஊரடங்கு காலத்தில் நிறுவனங்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்புக்குச் செலுத்த வேண்டிய தொகையை தாமதமாகச் செலுத்தியதாலும், பல தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாலும் மார்ச் மாதம் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு 5.72 லட்சம் ரூபாய் மட்டுமே வந்ததாகத் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் இது 10.21 லட்சம் ரூபாயாக இருந்தது என ஊழியர் வருங்கால வைப்பு நிதி மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் 774 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்: மாநகராட்சி அறிவிப்பு