நாட்டின் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் பங்குச்சந்தையிலும் எதிரொலித்துவந்த நிலையில், நேற்று 500 புள்ளிகளுக்கு மேல் குறைந்து கடும் சரிவை சந்தித்தது. இந்நிலையில் பொருளாதார சிக்கலை சீர்செய்யும் விதமாக புதிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். உள்நாட்டு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் வரி குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் நிதியமைச்சரின் அறிவிப்பில் இருந்தது.
இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை ஆகிய இரண்டும் அதிரடி உயர்வை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,00 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 38 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகிவருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 11 ஆயிரத்து 300 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் நடைபெறுகிறது. இதேநிலை நீடித்தால் இன்று மாலை வர்த்தகம் ஒரே நாளில் புதிய உச்சத்துடன் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2009ஆம் ஆண்டு சென்செக்ஸ் புள்ளிகள் இரண்டாயிரத்து 110 புள்ளிகள் உயர்வை சந்தித்ததே இதுவரை உச்சபட்ச சாதனையாக உள்ளது. அந்தச் சாதனை இன்று முறியடிக்கப்படுமா என பங்குச்சந்தை வல்லுநர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.