ரயில்வேத்துறையை லாபகரமாக நடத்தவும், பயணிகளுக்கு மேம்பட்ட சேவையை அளிக்கும் விதமாகவும் தனியார் சேவை அமைப்பான ஐ.ஆர்.சிடி.சி. நிறுவப்பட்டது. முதலில் உணவு தயாரிக்கும் கேட்ரிங், தங்கும் வசதிகள், டிக்கெட் புக்கிங் போன்ற சேவைகள் அளித்துவந்த ஐ.ஆர்.சி.டி.சி தற்போது பல்வேறு கூடுதல் சேவைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
ரயில்வேத் துறையில் தனியார்மயத்தை ஊக்கிவிக்கும் அடிப்படையில் மத்திய அரசு தீவிரம்காட்டிவருகிறது. நாட்டிலேயே முதல்முறையாக ரயில்வே வழித்தடங்களின் சேவை தனியார் நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சிக்கு அளிக்கப்பட்டது. மேலும் 50 வழித்தடங்களுக்கு மேல் தனியார்மயமாக்கும் முயற்சியிலும் ரயில்வேத்துறை தீவிரம் காட்டிவருகிறது.
இந்நிலையில் லாபகரமாக இயங்கிவரும் ஐ.ஆர்.சி.டி.சி பங்குச்சந்தையிலும் தற்போது களமிறங்கியுள்ளது. பங்குச்சந்தையில் களமிறங்கியுள்ள முதல் நாளிலேயே பெரும் வரவேற்பை ஐ.ஆர்.சி.டி.சி பெற்றுள்ளது. மும்பை பங்குச்சந்தையான பி.எஸ்.இ.யில் ஐ.ஆர்.சி.டிசியின் பங்கு அடிப்படை விலை 320 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அடிப்படை விலையிலிருந்து நூறு சதவிகிதம் அதிகமாக 644 ரூபாய்க்கு விற்பனையாகிவருகிறது. முதல் நாளிலேயே ஐ.ஆர்.சி.டிசிக்கு கிடைத்த வரவேற்பு ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பு மினிரத்னாவாக அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.