நாட்டின் பொருளாதார திட்டங்களை சீரமைப்பதில் அரசு சாரா அமைப்பான இந்திய தொழில் கூட்டமைப்பு பெரும் பங்காற்றிவருகிறது. நிறுவனங்கள், அரசுக்கு இடையே சுமூகமான சூழலை உருவாக்கும் நோக்கில் ஆலோசனை வழங்கிவருகிறது. இதன் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ள அதே நேரத்தில் அதற்கு ஆதரவாக காரணிகள் மாறிக் கொண்டிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் உள்கட்டமைப்புத் துறையில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டும். வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
வேளாண் துறைக்கு ஆதரவான காலகட்டத்தில் அதன் சராசரி வளர்ச்சி 3 விழுக்காட்டை தாண்டியுள்ளது வரலாறு மூலம் தெரியவருகிறது. இதுவரை, குறைந்தபட்ச ஆதரவு விலை மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கிய நிலையில், மானியம் வழங்கியதால் செலவுதான் அதிகமானது. அதே நேரத்தில் பொருளாதாரத்தை அது சிதைத்தது.
உபரி மேலாண்மை மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. நுகர்வோருக்கு நியாயமான விலையில் உணவு பொருள்களை வழங்க வேண்டிய அதே நேரத்தில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்த கொள்கை திட்டம் வகுக்க வேண்டும். சரியான முறையில் செயலாற்றும் உள்ளூர் விநியோக சங்கிலி இதில் முக்கிய பங்காற்றுகிறது" என்றார்.
இதையும் படிங்க: டெல்லியில் குறையும் கரோனா உயிரிழப்பு