இந்திய பங்குச் சந்தை நேற்று இறக்கத்தைச் சந்தித்திருந்தாலும் இன்றைய வர்த்தகத்தை ஏறுமுகத்திலேயே தொடங்கியது. அதன் பின் யாரும் எதிர்பாராத வகையில் நிதி நிறுவன பங்குகளை பலரும் விற்கத் தொடங்கியதால் கடைசி சில மணி நேரங்களில் இந்திய பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 261.84 புள்ளிகள் குறைந்து 31,453.51 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 87.90 புள்ளிகள் குறைந்து 9205.60 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்
எஸ்பிஐ நிறுவனத்தின் பங்குகள் நான்கு விழுக்காட்டிற்கும் மேல் சரிவைச் சந்தித்துள்ளது. அதைத்தொடர்ந்து பஜாஜ் பைனான்ஸ், ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, கோட்டக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சரிவைச் சந்தித்தன. மறுபுறம் எம் & எம், பவர் கிரிட், ஓ.என்.ஜி.சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்தன.
காரணம் என்ன?
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளும் ஊரடங்கை தளர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தாலும், இந்தியாவில் ஊரடங்கு தொடர்ந்து அதிகரித்துவருவதால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்தித்துள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சர்வதேச பங்குச் சந்தை
ஹாங்காங் பங்குச் சந்தை ஏறுமுகத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் ஏறுமுகத்தில் வர்த்தகமானது.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்ந்து 75.63 ரூபாய்க்கு வர்த்தகமானது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 7.02 விழுக்காடு அதிகரித்து பேரல் ஒன்று 29.11 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமானது.
இதையும் படிங்க: குறையும் கச்சா எண்ணெய் விலை - அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை!