மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 708.68 புள்ளிகள் (2.07 விழுக்காடு) சரிந்து 33,538.37 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 214.15 புள்ளிகள் (2.12 விழுக்காடு) சரிந்து 9,902 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம் இறக்கம் கண்ட பங்குகள்
எஸ்பிஐ வங்கியின் பங்குகள் அதிகபட்சமாக ஐந்து விழுக்காட்டிற்கும் மேல் சரிந்தது. அதேபோல் சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், மாருதி, டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
மறுபுறம், இண்டஸ்இண்ட் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தைச் சந்தித்தன.
காரணம் என்ன?
கோவிட்-19 தொற்று இரண்டாவது முறையாக தாக்கும் வாய்ப்புள்ளதால், பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க அமெரிக்க மத்திய வங்கி தயக்கம் காட்டுகிறது. அமெரிக்க மத்திய வங்கி தனது குறுகிய கால வட்டி விகிதத்தை பூஜ்ஜியமாக வைத்துள்ளது. இதன் தாக்கம் காரணமாகவே இந்திய பங்குச் சந்தை சரிவைக் கண்டுள்ளதாக பங்குச் சந்தை வல்லுநர் நரேந்திர சோலங்கி தெரிவித்துள்ளார்.
சர்வதேச பங்குச்சந்தை
ஷாங்காய், சியோல், ஹாங்காங், டோக்கியோ ஆகிய பங்குச்சந்தை சுமார் மூன்று விழுக்காடு வரை சரிவை சந்தித்தன. ஐரோப்பிய பங்குச்சந்தையும் தற்போது சரிவில் வர்த்தகமாகிவருகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா குறைந்து 75.79 ரூபாய்க்கு வர்த்தகமானது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 2.85 விழுக்காடு குறைந்து பேரல் ஒன்று 40.54 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகிவருகிறது.
இதையும் படிங்க: பங்குதாரர்கள் 25 விழுக்காடு தொகையை மட்டும் கொடுத்தால் போதும்! - ரிலையன்ஸ்