சீன நிறுவனமான 'ஹுவாவே' அமெரிக்க பயனாளர்களின் தகவல்களைத் திருடிவருவதாகக் கூறி சில மாதங்களுக்கு முன் ஹுவாவே தயாரிப்புகளை அமெரிக்க அரசு தடை செய்தது. இது அந்நிறுவனத்தின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கும் வகையில் ஹுவாவே நிறுவனம் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 17 சதவிகிதம் விற்பனையுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. உலகில் ஸ்மார்ட்ஃபோன் விற்பனை 2.6 சதவிகிதம் குறைந்தபோதும் ஹுவாவே நிறுவனத்தின் விற்பனை பெரிய அளவில் குறையவில்லை.
தனது சொந்த நாடான சீனாவில் அந்நிறுவனத்தின் விற்பனை அதிகரித்தது இதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. மேலும் அமெரிக்காவின் தடை ஹுவாவே நிறுவனத்தின் விற்பனையை இந்தக் காலாண்டில் பாதிக்காவிட்டாலும் வரும் காலாண்டுகளில் நிச்சயம் பாதிக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது.
ஒட்டுமொத்த ஸ்மார்ஃபோன் சந்தையில் தென் கொரிய நிறுவனமான 'சாம்சங்' 22 சதவிகிதத்துடன் முதலிடத்திலும் அமெரிக்காவின் 'ஆப்பிள்' 11 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மேலும் ஜியோமி, ஓப்போ முறையே நான்காவது, ஐந்தாவது இடத்தில் உள்ளன. சர்வதேச ஸ்மார்ஃபோன் சந்தையில் சீன நிறுவனங்கள் மட்டும் 42 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.