டெல்லி: பாமாயில், சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் சுங்க வரியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் சந்தையில் எண்ணெய்யின் விலை குறையும் என நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கச்சா பாமாயிலின் அடிப்படை இறக்குமதி வரி 10 விழுக்காட்டிலிருந்து 2.5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல கச்சா சோயா எண்ணெய் 2.5 விழுக்காடாகவும், கச்சா சூரியகாந்தி எண்ணெய் 7.5 விழுக்காடாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
கச்சா பாமாயில், கச்சா சோயா எண்ணெய், கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மொத்த வரி 24.75 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான மொத்த வரி 35.75 விழுக்காடாக இருக்கும் என்று ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனால் லிட்டருக்கு இரண்டு முதல் நான்கு ரூபாய் வரை எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு எண்ணெய் உற்பத்தியை பெருக்க, வரி சலுகைகளை தொடர்ந்து அளித்து வருகிறது.
விலை உயர்வால் மக்கள் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் நேரத்தில் வரும் பண்டிகை காலத்திற்கு ஏற்ப அரசு பொதுமக்களுக்கு சிறு ஆறுதல் தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.