கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்தியாவில் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது.
இந்நிலையில், தேசிய தலைநகர் பகுதியில் வெள்ளிக்கிழமை டீசல் விலை 17 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் ஒரு லிட்டர் டீசலின் விலை 81.18 ரூபாயில் இருந்து 81.35 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதே சமயம் கடந்த ஜூன் 29ஆம் தேதி ஐந்து பைசா உயர்த்தப்பட்ட பெட்ரோலின் விலை அதன்பின் உயர்த்தப்படவில்லை. இதன் காரணமாக டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 80.43 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம், டெல்லி அரசின் புதிய மதிப்புக் கூட்டு வரி காரணமாக இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக பெட்ரோலைவிட டீசல் விலை அதிகமானது. ஆனால், தற்போது கடந்த சில நாள்களாக சர்வதேச சந்தையில் டீசல் குறைந்துவருகிறது. இதன் காரணமாக விரைவில் அனைத்து நகரங்களிலும் டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எப்போதும் பெட்ரோல் விலையைவிட டீசல் விலை ஆறு முதல் ஒன்பது ரூபாய் வரை குறைவாகவே இருக்கும். இதனால், இந்தியாவில் தனிப்பட்ட போக்குவரத்து வாகனங்கள் பெட்ரோலில் இயங்கும் வகையிலும், சரக்கு மற்றும் பொதுப்போக்குவரத்து வாகனங்கள் டீசலில் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது டீசலின் விலை உச்சத்தை தொட்டுள்ளதால் போக்குவரத்து துறையில் இருப்பவர்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த, ஏப்ரல் மாதம் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் எரிபொருளின் தேவை பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்ததால், இந்தியாவில் மார்ச் 16ஆம் தேதிமுதல் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நிறுத்திவைக்கப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, உள்ளூர் சந்தையில் எரிபொருள்கள் விலை குறைப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது சர்வதேச சந்தையை காரணம்காட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் 10 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு!