மும்பை: ஜூன் 14ஆம் தேதி முதல் டிஎச்எஃப்எல் (திவான் ஹவுசிங் நிதி நிறுவனம்) பங்குகளில் வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பங்கு முகமைகளிலிருந்து டிஎச்எஃப்எல் நிறுவனத்தின் பங்குகளை நீக்குவதற்கான ஆணையை தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் மும்பை கிளை ஜூன் 8ஆம் தேதி அறிவித்தது. இது குறித்தான சுற்றறிக்கைகளும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மும்பையில் உயிரிழந்த மாஃபியா கும்பல் தலைவர்களில் ஒருவரான இக்பால் மிர்ச்சி உள்ளிட்ட பலரிடம் பண மோசடி செய்தததாக டிஎச்எஃப்எல் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கபில் வதாவனை அமலாக்க இயக்குநரகம் கைது செய்ததது.
மேல்மட்டத்தில் நடந்த மிகப் பெரும் ஊழலால் இந்த வங்கியானது வைப்பு நிதி, மியூச்சுவர் ஃபண்ட், பிற முதலீடுகள் என மொத்தம் 90 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான பணத்தை முதலீட்டாளர்களின் திருப்பிதர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் இந்த வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
மோசமான வங்கிகளின் நிலை
நாட்டில் நிலவி வந்த வங்கி மோசடிகளைக் குறைக்க தனியார் வசமிருந்த பெரும் வங்கிகள் சில பொதுத் துறை வங்கிகளாக்கப்பட்டன. மக்கள் செலுத்தும் பண இருப்பைக் கொண்டு, சாமானிய மக்களின் வாழ்வாதாரம் செழிக்க கடன்கள் வழங்கப்பட்டன.
ஆனால் தற்போது பொதுத்துறை வங்கிகளை தனியார் வசம் ஒப்படைக்க ஒன்றிய அரசு முனைப்புக் காட்டி வருவது, பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் ஆபத்தாகவே பார்க்கப்படுகிறது.
புதிய தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, பழைய தனியார் வங்கியான லஷ்மி விலாஸ் வங்கி, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களான டிஎச்எஃப்எல், ஐஎல் & எஃப்எஸ் ஆகியவற்றிலெல்லாம் உயர்தரப்பு ஊழல் தலைவிரித்தாடுகிறது.
அந்நிறுவனங்களின் உயர்தரப்பு நிர்வாகிகளே நிறுவனங்களின் பணத்தை விதிகளுக்கு புறம்பாகக் கடன் கொடுத்துவிட்டு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை கையூட்டாகப் பெற்றுள்ளனர் என்று ஒன்றிய புலனாய்வுத் துறையும், அமலாக்கத் துறையும் குற்றம் சாட்டியுள்ளன.