புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு இன்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய தினமான நேற்று நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.சுப்ரமணியன் தயார் செய்துள்ள இந்த அறிக்கையில், நாட்டின் தற்போதைய நிலையும், எதிர்கால வளர்ச்சி திட்டங்களும் இடம்பெறும். ஆனால், இந்த அறிக்கையில் இம்முறை வழக்கத்திற்கு மாறாக மதம், புராணம் சார்ந்த கருத்துகள் இடம்பெற்றுள்ளன. உதாரணமாகப் பெண்கள் முன்னேற்றம் சார்ந்த கருத்துக்கு, சிவனின் அர்த்தநாரீஸ்வரர்(ஆண் பாதி பெண் பாதி என்ற சமத்துவ கோட்பாடு) அடையாளம், வேத காலத்தில் இருந்ததாகக் கூறப்படும் பெண் துறவிகள் ஆகியோரை உதாரணமாக காட்டப்பட்டுள்ளது.
அதேபோல், வரியெய்ப்பு, கடன் திரும்பச் செலுத்தாத நடைமுறைகளை தவறு என மக்களுக்கு உணர்த்தவும் மதங்களைக் கையிலெடுத்துள்ளது ஆய்வறிக்கை. இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மதங்களில் கடன், ஏமாற்று வேலை போன்ற செயல்களைப் பாவங்களாகச் சித்தரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
பொதுவாக அரசாங்கத்தின் அறிவுசார் ஆய்வறிக்கைகளில் துறை சார்ந்த கருத்துகள் மட்டுமே இடம்பெறுவது சரியான வழக்கம். பாஜக தலைமையிலான ஆட்சியில் மதச்சார்பின்மை குறித்து ஏற்கனவே பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்நிலையில், தற்போது பொருளாதார ஆய்வறிக்கையிலேயே இதுபோன்ற மத அம்சங்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.