நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை வேகப்படுத்தவும், அரசின் நிதிப்பற்றாக்குறையைச் சீர் செய்யவும் மத்திய அமைச்சரவையின் பொருளாதாரத்திற்கான குழு முக்கிய முடிவை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ' பாரத் பெட்ரோலியம், சிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கான்கர் (CONCOR), டி.எஃச்.டி.சி(THDC), நீப்கோ (NEEPCO) உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட நிறுவனங்களில் முதல் மூன்று நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், சிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கான்கர்(CONCOR) ஆகிய நிறுவனங்கள் முழுமையாகத் தனியர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டி.எஃச்.டி.சி (THDC), நீப்கோ (NEEPCO) ஆகிய இரு நிறுவனங்களின் பங்குகள் தனியார் வசம் கொடுக்கப்பட்டு, அதன் நிர்வாகப் பொறுப்பு என்.டி.பி.சி (NTPC) என்ற மற்றொரு பொதுத்துறை நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது. எனவே நிர்வாக ரீதியாகப் பார்க்கும்போது இந்த இரு நிறுவனங்களும் தற்போதும் பொதுத்துறை நிறுவனங்களாகவே செயல்படும்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட முடிவு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. தன்னிடம் உள்ள 53.3 சதவிகிதப் பங்குகளை முழுமையாக விற்கப்போவதாகத் தெரிவித்துள்ள அரசு அதன் நிர்வாகத்தையும் தனியார் வசம் ஒப்படைக்க எடுத்த முடிவு உறுதியான முடிவாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல், சிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் 63.7 சதவிகிதப் பங்குகளை முழுமையாகவும், கான்கர் நிறுவனத்தின் 54.8 சதவிகிதப் பங்குகளில் 30.8 சதவிகிதப் பங்குகளையும் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. பங்குச்சந்தையில் ஏலம் விடப்பட்ட நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், சிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கான்கர் ஆகிய நிறுவனங்களின் மதிப்பு முறையே, 62 ஆயிரத்து 800 கோடி, இரண்டாயிரம் கோடி, 5 ஆயிரத்து 700 கோடியாகும்.
இந்த மூன்று நிறுவனங்களின் மூலம் 70 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அரசு திரட்டவுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் இதுவரை 17 ஆயிரத்து 364 கோடி ரூபாய் திரட்டப்பட்ட நிலையில் மேற்கொண்ட தொகை பெரும் மூலதனமாகக் கருதப்படுகிறது.
மேலும், டி.எஃச்.டி.சி (THDC), நீப்கோ (NEEPCO) ஆகிய இரு நிறுவனங்களின் விற்பனையையும் சேர்த்து சுமார் 1.05 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என அரசு எதிர்பார்க்கிறது. இது அரசின் நிதிப் பற்றாக்குறை சிக்கலைத் தவிர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட நிறுவனங்கள் விற்பனைக்கு வரும் போது தனியார் நிறுவனங்கள் எந்தளவுக்கு ஆர்வத்துடன் ஏலம் கேட்க வரும் என்ற எதிர்பார்ப்பும் பொருளாதார நிபுணர்களின் மத்தியில் எழுந்துள்ளது. காரணம் நாட்டில் பொருளாதார மந்த நிலை நீண்ட நாட்களாக நீடித்து வரும் நிலையில் தனியார் நிறுவனங்கள் நம்பிக்கையுடன் செயல்படுமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
அரசு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காதபட்சத்தில், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை வேறுவிதத்தில் நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ள முனைப்புக் காட்டும். மேலும், ஒரு சில நிறுவனங்களின் பங்குகளை மட்டும் விற்றுவிட்டு நிர்வாகத்தைத் தன்வசம் வைத்துக்கொள்ளும்.
அரசின் இந்த தனியார்மயக் கொள்கை நடவடிக்கை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரடி தனியார் மயத்திட்டம் வெற்றி பெறுகிறதா அல்லது அரசு நிர்வாகத்துடன் தனியார் மயத்திட்டம் வெற்றி பெறுகிறதா என்பதற்கு காலம் விரைவில் பதில் சொல்லும்.
இதையும் படிங்க: சீனாவில் 800 ட்ரோன்கள் மூலம் வித்தியசமான ஒளி நிகழ்ச்சி - சூப்பர் காணொலி!